மியான்மரில் சைபர் அடிமைத்தனத்தில் தள்ளப்பட்ட 60 இந்தியர்கள் மீட்பு; மகாராஷ்டிராவில் 5 முகவர்கள் கைது

இந்திய இணையக் குற்றத் தடுப்பு அதிகாரிகள் மியன்மாரிலிருந்து 60 இந்திய நாட்டவரைக் காப்பாற்றியுள்ளனர்.அந்த இந்தியர்கள், நல்ல வேலை வழங்கப்படும் என்று கூறி ஈர்க்கப்பட்டு இணைய அடிமைகளாக இயங்கவைக்கப்பட்டனர். அத்தகையோர் வலுக்கட்டாயமாக இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவர்.இதன் தொடர்பில், இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலக் காவல்துறையின் இணையப் பிரிவினர் ஐந்து முகவர்களையும் கைது செய்தனர். அவர்களில் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவார்.
பாதிக்கப்பட்டவர்கள், தாய்லாந்திலிருந்து மியன்மாருக்குக் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு முதலீட்டு மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
மோசடிக்காரர்கள், சமூக ஊடகங்களின் மூலம் பாதிக்கப்பட்டோரை வேலை ஆசை காட்டி ஈர்த்தனர். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக சம்பளம் வழங்கும் வேலைகள் இருப்பதாக ஆசை காட்டி பாதிக்கப்பட்டோர் ஈர்க்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்தது.பாதிக்கப்பட்டோரை வரவழைப்பது, அவர்களுக்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து தருவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முகவர்கள் மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள், தாய்லாந்திலிருந்து மியன்மாருக்குப் படகில் அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு அவர்கள், கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பலத்த பாதுகாப்புள்ள பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்கள் பெரிய அளவிலான மோசடிச் செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்.
கைதானோரில் இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கும் மனிஷ் கிரே எனும் இந்திய நடிகர் ஒருவரும் அடங்குவார். அவர், மோசடிச் செயல்களுக்காக ஆட்களை வேலைக்கு எடுக்கும் முகவராகச் செயல்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, மியன்மாரின் மியாவாடி வட்டாரத்தில் மோசடி நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 32 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மியன்மாரில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிசெய்தது என்று ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்தது.
போலி வேலை விளம்பரங்களால் ஈர்க்கப்படவேண்டாம் என்று இந்தியத் தூதரகம் தான் விடுத்துவரும் எச்சரிக்கையை அறிக்கைமூலம் வலியுறுத்தியது.
மியன்மார்-தாய்லாந்து எல்லைப் பகுதியில் தகுந்த அனுமதியின்றிப் பயணம் மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதைத் தூதரகம் நினைவூட்டியது. அவ்வாறு செய்தால் வருங்காலத்தில் தடைகள் விதிக்கப்படலாம் என்றும் தூதரகம் குறிப்பிட்டது.