அறுகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது
தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என கிடைத்த புலனாய்வு தகவல் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனத் தகவல் கிடைத்தவுடன் அவர்களின் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார்.
“எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருந்தன. அதுதான் உண்மை” என்று குற்றம் சாட்டினார்.
“இதுவரை, நாங்கள் ஆறு நபர்களை கைது செய்துள்ளோம். மாலத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகளில் இருந்து, இது என்ன மாதிரியான திட்டம் அல்லது முயற்சி என்று எங்களால் இன்னும் சொல்ல முடியவில்லை. ஏனெனில், கைது செய்யப்பட்ட 06 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணைகளின் மூலம் அவ்வாறானதொரு முடிவுக்கு வர முடியாது” என்றார்.
எனவே இது தொடர்பில் தவறான வியாக்கியானம் தேவையில்லை எனினும் நாட்டு மக்கள் அந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.