பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; துப்பாக்கிதாரி தற்கொலை

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலுள்ள புகழ்பெற்ற உணவுச் சந்தையில் திங்கட்கிழமை (ஜூலை 28) நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் நால்வர் உட்பட குறைந்தது அறுவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்திற்கான காரணம் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது என்று பேங்காக்கின் பேங் சுவே மாவட்டக் காவல்துறைத் துணைத் தலைவர் வொரபட் சுக்தாய் கூறினார்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் பின்னர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என்றும் அவரை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றும் சுக்தாய் தெரிவித்தார்.
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லையில் தற்போது நடந்துவரும் சண்டைக்கும் இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
சுற்றுப்பயணிகள் அதிகம் திரளும் சட்டுசாக் சந்தைக்கு அருகிலுள்ள ஓர் தோர் கோர் சந்தையில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படாததால் தாய்லாந்தில் எளிதாகத் துப்பாக்கி வாங்க இயலும் என்பதால் அங்கு இத்தகைய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது வழக்கம்தான் எனச் சொல்லப்படுகிறது.