தெற்கு பிலிப்பீன்சில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
 
																																		தென் பிலிப்பீன்சை ஒட்டிய ஆழ்கடலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) ரிக்டர் அளவில் 6.1 என்று மதிப்பிடப்படும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிலிப்பின்சின் தாவோ மாநிலத்திலிருந்து ஏறத்தாழ 70 கிலோமீட்டர் தொலைதூரத்தில் கடலில் 101கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து இதுவரை சேத விவரம் குறித்த எந்தத் தகவலும் இல்லை.
“நிலநடுக்கத்தால் பலமான ஆட்டம் எதுவும் ஏற்படவில்லை. அனால், அலுவலகத்தில் இருந்த மேசைகள், கணினிகள் யாவும் கிட்டத்தட்ட ஐந்து விநாடிகளுக்கு ஆடின,” என்று கூறினார். சாரங்கானி தீவிலிருந்து வந்த மாநில மீட்புப் பணியாளரான மார்லாவின் ஃபுவெண்டஸ் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத் தகவல் கூறுகிறது.
நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்சில் பசிபிக் பெருங்கடல் நிலநடுக்க வட்டத்தில் இருப்பதால் அந்நாட்டில் நிலநடுக்கம் அன்றாட நிகழ்வு. இந்த நிலநடுக்க வட்டம் ஜப்பானில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா வழியாக பசிபிக் ஆழ்கடல் பகுதிவரை நீண்டுள்ளது.
 
        


 
                         
                            
