வங்கதேசத்தில் பணியாளரை காப்பாற்ற முயன்ற 55 வயது இந்து நபர் கொலை
வங்கதேசத்தின்(Bangladesh) காசிபூர்(Ghazipur) மாவட்டத்தில், தனது கடை ஊழியரை தாக்குதலிலிருந்து பாதுகாக்க முயன்ற இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
55 வயதான லிட்டன் சந்திர கோஷ்(Liton Chandra Ghosh) என்ற காளி(Kali), பாராநகர்(Baranagar) சாலையில் உள்ள பைஷாகி ஸ்வீட்மீட் அண்ட் ஹோட்டல்(Baisakhi Sweetmeat and Hotel) என்ற இனிப்புக் கடையின் உரிமையாளர் ஆவார்.
காவல்துறை கூற்றுப்படி, கடைக்கு வந்த 28 வயதான மாசும் மியாவிற்கும்(Masum Mia) கடையின் 17 வயது ஊழியர் அனந்த தாஸ்(Anant Das) என்பவருக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சினைக்காக வாய்த் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் விரைவில் உடல் ரீதியான சண்டையாக மாறியது.
சிறிது நேரத்திலேயே, மாசுமின் பெற்றோர் 55 வயது முகமது ஸ்வபன் மியா(Mohammad Swapan Mia) மற்றும் 45 வயது மஜீதா கதுன்(Majeetha Khatun) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
அனந்த தாஸைப் பாதுகாக்க லிட்டன் சந்திர கோஷ் தலையிட்டார், அப்போது அவரும் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், மண்வெட்டியால் தலையில் தாக்கப்பட்டு காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்வபன் மியா, மஜீதா காதுன் மற்றும் மாசும் மியா ஆகியோரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.





