காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 மருத்துவ மாணவர்கள்; மெக்சிகோவில் அதிர்ச்சி சம்பவம்!
மெக்சிகோவில், தனியாக நின்றிருந்த காருக்குள் 5 மருத்துவ மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் செலயா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் மாஃபியா கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இவர்களை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த போதைப்பொருள் கும்பல்கள் தங்களுக்கு யார் பெரியவன் என்பதற்காக நடத்தும் தாக்குதல்களை காட்டிலும், பொதுமக்களை கொன்று தங்களது ஆளுமையை நிரூபிப்பதிலும் அதிகம் பேரை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செலயா பகுதியில் கார் ஒன்றில் சடலங்கள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் அங்கு சென்று பார்த்த போது, அனாதையாக நின்றிருந்த காரில் துப்பாக்கியால் சுடப்பட்ட 5 சடலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள், அதே பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகம் ஒன்றில் பயின்று வந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது.
மாணவர்கள் அனைவருக்கும் 25 முதல் 30 வயதிற்குள் இருக்கலாம் எனவும், அனைவரும் தலையில் சுடப்பட்டு உயிரிழந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாண்டா ரோசா டி லிமா என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல் இந்த படுகொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மாணவர்களை போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்த முயன்று, அவர்கள் மறுத்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.