பால்வெளி அண்டத்தில் 5 லட்சம் சூரியன்கள் – நாசா வெளியிட்ட தகவல்
நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பால்வெளி அண்டத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் விஞ்ஞானிகளே எதிர்பார்க்காத பல உண்மைகள் தெரிய வந்துள்ளது.
நமக்கு தெரியாத பல ரகசியங்கள் விண்வெளியில் ஒளிந்துள்ளது. அவை அனைத்துமே நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் விண்வெளியில் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் ஒரு சதவீதம் கூட இருக்காது. தோண்டத் தோண்ட வெளிவரும் பொக்கிஷம்போல, விண்வெளி ஆய்வு என்பது ஒரு முடிவில்லாத கயிறு தான். நாம் தேடத் தேட பல உண்மைகள் வந்துகொண்டே இருக்கும்.
பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இது விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு பல்வேறு விதமான புகைப்படங்களை அனுப்பி வந்த நிலையில், தற்போது பல சூரியக் குடும்பங்கள் இருக்கும் பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
சேகடேரியல்-சி எனப்படும் நட்சத்திர கூட்டத்தை மொத்தமாக சேர்த்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், நமது சூரியனைப் போலவே 5 லட்சத்திற்கும் அதிகமான விண்மீன்கள் பதிவாகியுள்ளது. இந்த பால்வெளி அண்டம் பூமியிலிருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகும். இதன் மையப் பகுதியை தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்ஃப்ரா ரெட் கேமராக்களின் உதவியால் பதிவு செய்துள்ளது.
இதற்காக கொடுக்கப்பட்ட விளக்கத்தில், நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே கருமேகங்களும், அவை உருவாவதற்கு காரணமாக நைட்ரஜன் வாயு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மிக அழுத்தமான நிலையில் உள்ள தூசிகளும், வாயுக்களும் நிறைந்துள்ள அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விண்மீன்கள் ஒன்றாக புதைந்துள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை சூரியனை விட 30 மடங்கு அதிக நிறை கொண்ட விண்மீன்களாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். அதேபோல இந்த விண்மீன் கூட்டத்திற்கு நடுவே மிகப்பெரிய கருந்துளையும் உள்ளதாக நாசா கூறுகிறது. உலகம் முழுவதும் இணையத்தில் இந்த புகைப்படங்கள் தற்போது பகிரப்பட்டு, இவைகுறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
https://x.com/NASA/status/1726652548508192785?s=20