தங்கம் இறக்குமதி செய்யும் 5 நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் அபராதம்
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றிற்கு 179 மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.
தங்கம் இறக்குமதி செய்யும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்யாமல், மூன்றாம் தரப்பினரிடம் இருந்து வாங்கப்படும் தங்கத்திற்கு, உற்பத்தி அறிக்கைகளை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம் விதிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில், கடந்த மார்ச் மாதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், சட்டவிரோதமான முறையில் தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பான சம்பவங்களை கருத்திற்கொண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.