இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 49 வயது சீன நாட்டவர் கைது
உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) பஹ்ரைச்(Bahraich) மாவட்டத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ருபைதிஹா(Rupaidiha) சோதனைச் சாவடியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து எல்லைப் பகுதியை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் 49 வயது சீனக் குடிமகனை சஷாஸ்திர சீமா பால் (SSB) காவல்துறை படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் சீனாவின் ஹுனான்(Hunan) மாகாணத்தைச் சேர்ந்த லியு குன்ஜிங்(Liu Qunjing) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்குள் நுழைவதற்கு அவரிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரிடமிருந்து மூன்று தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்றில் இந்தியப் பிரதேசத்தில் உள்ள பல முக்கியமான இடங்களின் வீடியோக்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் மீது வெளிநாட்டினர் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.





