மியான்மரில் மோசடி மையங்களிலிருந்து 47 நேபாளிகள் மீட்பு
மியான்மரின்(Myanmar) மியாவாடி(Myawaddy) பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மோசடி மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 நேபாளிகள்(Nepalese) மீட்கப்பட்டு, தாய்லாந்து(Thai) மற்றும் மியான்மர் அதிகாரிகளின் ஆதரவுடன் காத்மாண்டுவுக்கு(Kathmandu) திருப்பி அனுப்பப்பட்டதாக பாங்காக்கில்(Bangkok) உள்ள நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.
26 மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள், குற்றவியல் கும்பல்களுக்குப் பெயர் பெற்ற பகுதிகளான ஷ்வே கொக்கோ(Shwe Kokko) மற்றும் கே.கே. பார்க்கில்(KK Park) தொலைத்தொடர்பு மோசடி மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தூதரகத்தின் கூற்றுப்படி, மீட்கப்பட்டவர்களின் வயது 17 முதல் 41 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் இரண்டு முதல் 18 மாதங்கள் வரை மோசடி மையங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் இராணுவம் மையங்களை சோதனை செய்து நேபாளிகளை விடுவித்ததாகவும், பின்னர் மே சோட்டில் தாய் குடிவரவு அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டு தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோன்ற மையங்களில் இன்னும் எத்தனை நேபாளிகள் சிக்கியுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.




