இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 410 வைத்தியசாலைகள் பாதிப்பு
டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் இலங்கையில் 410 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகபட்ச சேதங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க,
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக 500க்கும் மேற்பட்ட சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர மேலும் கால அவகாசம் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.
சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி கருத்து வெளியிடுகையில்,
அனர்த்த நிலைமை காரணமாக 53 வைத்தியசாலைகளில் உள்ள உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை வைத்தியசாலை மற்றும் சிலாபம் வைத்தியசாலை ஆகிய இரண்டிலும், அந்த நேரத்தில் ஊழியர்கள் எடுத்துச் செல்ல முடிந்த அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
குறிப்பாக, மஹியங்கனையில் நிறைய உபகரணங்கள் – அதாவது சில இயந்திரங்களில் கழற்றக்கூடிய பாகங்களை எடுத்து மேலே கொண்டு சென்றுள்ளனர்.
பெரிதும் சேதமடைந்தவை மூன்று உள்ளன. ஒன்று சிலாபம் வைத்தியசாலை, மற்றொன்று மஹியங்கனை, மற்றொன்று வத்தேகம. அதில் பெரிய சேதங்கள் இல்லை. கட்டிடங்களில் சேதமடைந்தவை 236 ஆகும். அதாவது, உபகரணங்களில் சேதம் உள்ளவை 53 ஆகும். அது குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கூறினார்.





