இந்தியாவில் பள்ளி சுற்றுலா சென்ற 4 மாணவிகள் கடலுக்குள் மூழ்கி மரணம்
பள்ளிச் சுற்றுலா சென்ற மாணவிகள் நால்வர் உயிரிழந்த சோகச் சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது.
கோலார் மாவட்டத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் ரெசிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் 54 மாணவிகள் பள்ளிச் சுற்றுலா சென்றனர்.அதன் ஒரு பகுதியாக அவர்கள், உத்தர கன்னடா பகுதியில் உள்ள முருடேஸ்வரர் கடற்கரைக்கு பொழுதைக் கழிக்கச் சென்றனர்.
அவர்களில் ஏழு மாணவிகள் ஒன்றாகக் குளிக்க கடலுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
உதவி கேட்டு குரல் எழுப்பியவாறு, தண்ணீருக்குள் தத்தளித்த மாணவிகளைக் கண்ட ஆசிரியர்கள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.அப்போது விரைந்து வந்த மீனவர்கள் கடலில் குதித்து மாணவிகளைக் காப்பாற்ற முயன்றனர்.
நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின்னர் ஏழு மாணவிகளில் மூவரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.ஸ்ரீவந்ததி, தீஷிதா, வந்தனா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காப்பாற்றப்பட்ட யசோதா, வீக்ஷனா, லிபிகா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவனைக்குச் சென்று நிலைமையைக் கேட்டறிந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர், சுற்றுலாவுக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் உடன் சென்ற ஊழியர்கள் அனைவரும் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.