அமெரிக்காவில் 4 போத்தல் குடிநீரால் பறிபோன தாயாரின் உயிர்!
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில்கடும் வெப்பம் காரணமாக 20 நிமிடங்களில் 4 போத்தல் தண்ணீர் குடித்த தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டியானா மாகாணத்தை சேர்ந்த 35 வயது ஆஷ்லே சம்மர்ஸ் என்பவரே கடுமையான வெப்பம் காரணமாக 64 அவுன்ஸ் குடிநீரை சுமார் 20 நிமிடங்களில் குடித்து தீர்த்துள்ளார்.கடந்த மாதம் ஆஷ்லே சம்மர்ஸ் குடும்பம் Freeman ஏரி பகுதியில் 4ம் திகதி விடுமுறையை கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளது. இந்த நிலையில், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார் 2 பிள்ளைகளுக்கு தாயாரான ஆஷ்லே சம்மர்ஸ்.
அப்போது தமக்கு ஏற்பட்ட தாகத்தை தணிக்க, எந்த அளவுக்கு தண்ணீர் குடித்தாலும் அது போதுமானதாக இருக்கப் போவதில்ளை என தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, சுமார் 20 நிமிடங்களில் அவர் 16 அவுன்ஸ் தண்ணீர் கொண்ட 4 போத்தல்களை காலி செய்துள்ளார்.
ஒரு நாளில் பயன்படுத்த வேண்டிய குடிநீரை 20 நிமிடங்களில் குடித்து முடித்துள்ளார் என்றே அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குடியிருப்புக்கு திரும்பிய ஆஷ்லே, திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார்.
திகைத்துப்போன குடும்பத்தினர் உடனடியாக அவரை இண்டியானா பல்கலைக்கழக மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பித்துள்ளனர். அவரது மூளை அப்போது வீங்கி இருந்ததாகவும், கடைசி வரையில் அவருக்கு நினைவு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், தண்ணீர் அதிகம் குடித்ததாலும், ரத்தத்தில் உப்பின் அளவு குறைந்ததும் அவரது இந்த நிலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர். மிக குறைந்த கால அளவில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால், ரத்தத்தில் சோடியத்தின் அளவை அது கரைத்துள்ளது என விளக்கமளித்துள்ளனர்.இதுபோன்ற நிலையில், தசைப்பிடிப்பு, வலி, குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி ஏற்படும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், மூளை வீக்கமடையும் எனவும், இதன் காரணமாக குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் இறப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.