ஏமன் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 35 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனால், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் ஏமன் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள ராணுவ தலைமையக கட்டிடம் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





