சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம்!
இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,சிவில் சமூக செயற்பாட்டார்களான அருட்தந்தை ஜெகதாஸ்,அருட்தந்தை ரொசான்,க.லவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09மாதம் திகதி மாலை 5.30மணியளவில் இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்து சத்துருக்கொண்டான், கொக்குவில்,பனிச்சையடி,பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது சிறுவர்கள், பெண்கள்,வயோதிபர்கள்,இளைஞர் யுவதிகள்,கர்ப்பிணிப்பெண்கள் என 186பேர் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டனர்.
இன்றைய தினத்தை இப்பகுதி மக்கள் நினைவுத்தூபி அமைத்து சத்துருக்கொண்டான் படுகொலை நாளாக அனுஸ்டித்துவருகின்றனர்.
தாங்கள் மூன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியங்களை பதிவுசெய்துள்ளதாகவும் அவற்றில் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வழங்கியபோதிலும் இதுவரையில் தமக்கான நீதிபெற்றுக்கொடுக்கப்படவில்லையெனவும் இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இன்று நீதித்துறையினையே மாற்றி தமக்கு சார்பான தீர்ப்புகளை பெறும் நிலைமைகள் அரசாங்க மட்டங்களினால் காணப்படுவதனால் இலங்கையின் நீதித்துறையில் தமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தினால் இதற்கான சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை இந்தவேளையில் வலியுறுத்துவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினால் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கையானது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரிடம் வழங்கப்பட்டது.
மக்களின் குரலாக ஊடகத்துறையினர் செயற்படுவதன் காரணமாக தமது கோரிக்கையினை ஊடகவியலாளர்கள் ஊடாக வெளிக்கொணரவேண்டும் என்ற காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.