இந்தியாவில் 33 வயது நபரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 33 நாணயங்கள்!!
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலஸ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அறுவை சிகிச்சை ஒன்றில் ரூ.300 மதிப்புடைய 33 நாணயங்கள், ஓர் இளம் நபரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டன.
வயிற்று வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற நபர், சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
ஜனவரி 31ஆம் திகதி குமர்வின் நகரில் நடந்த இச்சம்பவத்தில், வயிற்று வலியால் துடித்த 33 வயது நபரை அவரின் குடும்பத்தார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் இருந்த டாக்டர் அங்குஷ் ‘எண்டோஸ்கோபி’ வழி நபரின் வயிற்றில் இருந்த நாணயங்களைக் கண்டுபிடித்தார்.
நாணயங்களின் மொத்த எடை 247 கிராம். ஒருசில நாணயங்கள் ரூ.1, ரூ 2 மதிப்பிலும் மற்றவை ரூ.10 மதிப்பிலும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ரு.20 மதிப்புடைய ஒரு நாணயமும் இருந்தது.
“இது சவால்மிக்கதாக இருந்தது. அறுவை சிகிச்சையை எளிதில் செய்ய முடியவில்லை. நோயாளியின் வயிறு பலூன் போல் வீங்கிவிட்டது. உள்ளே எங்கும் நாணயங்களாக இருந்தன,” என்றார் மருத்துவர்.
அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்பட்டது.இந்நோயாளி மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் விளக்கினார் டாக்டர் அங்குஷ்.