பங்களாதேஷில் 32 பேர் பலி
பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய போராட்டத்தின் போது 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், ஆளும் அவாமி லீக்கின் செயல்பாட்டாளர்கள் இந்த எதிர்ப்புகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
டாக்காவின் ஷாபாக் பகுதியில் உள்ள பெரிய மருத்துவமனையான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், பல வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டாக்காவில் முக்கிய சாலையை மறித்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
மேலும், போராட்டக்காரர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பல கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி இணைய வசதிகளுக்கான அணுகலை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியும் தடைசெய்யப்பட்ட வலதுசாரி ஜமாத்-இ-இஸ்லாமும் மாணவர்களை மீண்டும் வன்முறையில் ஈடுபடத் தூண்டுவதாக பிரதமர் ஹசீனாவின் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது.
மாணவர் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பங்களாதேஷ் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வங்கதேசத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த ஷேக் ஹசீனாவுக்கு இந்த எதிர்ப்பு அலை மிகுந்த அழுத்தத்தை கொடுக்கும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.