கைபர் பக்துன்க்வா கிராமத்தில் பாகி்ஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. எட்டு LS-6 என வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பொது மக்கள் பலர் உயிரிழந்து வரும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது. இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். நிலப்பரப்பை மலைகள் சூழ்ந்துள்ள இந்த மாகாணம் இயற்கையாகவே மறைவிடத்திற்கு வழிவகுத்துள்ளது.
சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், தங்களுடைய தளத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது





