சிஎஸ்கே குறிவைக்கும் 3 இங்கிலாந்து வீரர்கள்
ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த எதிர்பார்ப்புதான் கிரிக்கெட் ரசிகர்களிடம் தற்போது குவிந்துள்ளது. மெகா ஏலம் விதிகள் வெளியான பின்னர் ஏலம் எப்போது நடக்கும், எங்கு நடக்கும், யார் யாரை அணிகள் விடுவிக்கிறது, தக்கவைக்கிறது, ஏலத்தில் எடுக்கிறது என அடுத்தடுத்து ரசிகர்களிடம் பல்வேறு கேள்விகள் உள்ளன.
அதிலும் முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), மும்பை இந்தியன்ஸ் அணிகள் விதிகளின்படி ஏலத்திற்கு முன்னர் யாரை தக்கவைக்கும், ஏலத்தில் RTM மூலம் யாரை எந்த தொகைக்கு தக்கவைக்கும் என்பதை கிரிக்கெட் உலகமே உற்று பார்க்கிறது. வரும் அக். 31ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைப்பு பட்டியல்களை சமர்பிக்க வேண்டும் என்பதால் அணிகளுக்குள் பேச்சுவார்த்தை தற்போது சூடுபிடித்துள்ளது.
வீரர்களை தக்கவைப்பது ஒருபுறம் என்றால் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை குறிவைத்து தூக்க வேண்டும் என்பதையும் அணிகள் இப்போதே இறுதி செய்ய வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து இதில் பார்ப்போம். அந்த அணி ருதுராஜ், ஜடேஜா, தூபே, பதிரானா, தோனி ஆகியோரை ஏலத்திற்கு முன்னரே தக்கவைக்கும். RTM மூலம் ஓப்பனிங்கிலோ, மிடில் ஆர்டரிலோ நல்ல பேட்டரை தக்கவைக்க நினைக்கும்.
அதே நேரத்தில் ஏலத்தில் நிச்சயம் ஒரு வெளிநாட்டு ஓப்பனரையோ அல்லது மிடில் ஆர்டரில் வெளிநாட்டு பேட்டரையோ எடுக்க சிஎஸ்கே திட்டமிடும். இந்நிலையில், வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இந்த மூன்று இங்கிலாந்து வீரர்களை எடுக்க நிச்சயம் போட்டிப்போடும்.
வில் ஜாக்ஸ்
ஆர்சிபி அணியில் கடந்த சீசனில் மிரட்டிய வில் ஜோக்ஸ் நிச்சயம் (Will Jacks) ஏலத்திற்கு வருவார். அவரை RTM மூலம் தூக்க ஆர்சிபி திட்டமிட்டாலும் கூட பெரிய தொகைக்கு எடுக்க தயங்கும். சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்ஸை எடுத்தது போல் இளம் வெளிநாட்டு பேட்டரை மிடில் ஆர்டருக்காக எடுக்க நினைக்கும் நிச்சயம் ரூ.10 கோடிக்கும் மேல் மோதல் இருக்கும். எடுக்கிறதோ இல்லையோ சிஎஸ்கே முட்டிமோதும்.
ஜாஸ் பட்லர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஓப்பனிங் பேட்டர் ஜாஸ் பட்லர் (Jos Butler). இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைக்கும் என்றாலும் ஒருவேளை ஏலத்திற்கு வந்தால் சிஎஸ்கே சும்மா இருக்காது. பட்லருக்கு தோனி ஆதர்சம் என்பதாலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர் கிடைப்பார் என்பதாலும் பட்லர் மேல் சிஎஸ்கே அதிகம் முதலீடு செய்ய துடிக்கும். பட்லரின் தடாலடி ஓப்பனிங் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பெரிய ஸ்கோரை எட்ட வாய்ப்பளிக்கும். கடந்த முறை சிஎஸ்கேவுக்கு ஓப்பனிங் சரியாக அமையாததுதான், பிளே ஆப் சுற்றுக்கு கூட வராமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பில் சால்ட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் கோப்பையை வெல்ல பில் சால்ட் (Phil Salt) ஒரு முக்கியமான வீரர் ஆவார். மாற்று வீரராக களம்புகுந்து, சுனில் நரைன் உடன் சேர்ந்து அதிரடியாய் அனலை கக்கிய பில் சால்ட் நிச்சயம் இந்த மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு போவார். இருந்தாலும் இவரை எடுக்க சிஎஸ்கே முட்டிமோதும். இவரை கேகேஆர் ஏலத்தில் RTM மூலம் தக்கவைக்க துடிக்கும்.