தினமும் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் 3 அற்புதமான நன்மைகள்
குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், அனைத்து பருவங்களிலும், நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இதன் மூலம் நாம் நமது உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். இது உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் உதவும். பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாகவும் நடைப்பயிற்சி உள்ளது.
நடைபயிற்சியை ஒரு அன்றாட பழக்கமாக வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. இதை அனைவராலும் எளிதாக செய்ய முடியும். தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், அல்லது காலை அல்லது மாலை ஏதாவது ஒரு வேளையில் நடைபயிற்சி செய்பவர்களின் உடல் மற்றவர்களை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கும்.
இதன் காரணமாக அன்றாட பணிகளை விரைவாக செய்ய முடியும். காலையிலோ அல்லது மாலையிலோ நடப்பது நல்லது. ஆனால் பிரத்யேகமாக நடக்க நேரம் இல்லையென்றால் பகலில் உங்கள் வேலைக்கு இடையில் முடிந்தவரை நடக்க முயற்சிக்கவும்.
தினமும் நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? இந்த விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
நடைபயிற்சி பற்றி அறிவியல் கூறுவது என்ன?
தினமும் நடைப்பயிற்சி செய்வதால் ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகள் கிடைப்பதாக அறிவியல் கூறுகிறது. நடைபயிற்சி நமது தசைகளை பலப்படுத்துகிறது. தசைகள் சுருங்கும்போது, அவை அடினோசின் மோனோபாஸ்பேட்-செயல்படுத்தப்பட்ட புரோட்டீன் கைனேஸ் என்ற நொதியை செயல்படுத்துகின்றன. இது உணவில் இருந்து நமது தசை செல்களுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது. அங்கு அது உடலுக்கு ஆற்றலாக மாற்றப்படுகிறது. ஆற்றலாக மாற்றும் இந்த செயல்முறையானது நடக்கவில்லை என்றால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பலர் ஆளாக நேரிடலாம்.
நடைபயிற்சியின் நன்மைகள்
மன அழுத்தம் நீங்கும்
காலையில் ஃப்ரெஷ்ஷான காற்றில் நடப்பது உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதிபடுத்துகிறது. காலையில் நடப்பது உடலில் உள்ள கார்டிசோலின் அளவையும் குறைக்கிறது. இதன் காரணமாக மனம் மற்றும் உடல் பதற்றத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
தினமும் நடைப்பயிற்சி செய்வது உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. இது உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.
நல்ல தூக்கம்
நீங்கள் தினமும் 30 நிமிடங்களுக்கு மேல் நடந்தால், இரவில் ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்தை நிச்சயமாக பெற முடியும். நன்றாக தூங்கி எழுந்தால், உடல் ஆற்றல் மிக்கதாக, சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம். இதனால் அனைத்து பணிகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.