இவ்வாண்டு ஆகஸ்டில் 27,000 தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழப்பு
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து அதிகமானோரை ஆட்குறைப்பு செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டில் 27,000க்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டெல், ஐபிஎம், சிஸ்கோ போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி புதிதாகத் தொடங்கப்பட்ட சிறிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்தன.
இவ்வாண்டு இதுவரை 422 நிறுவனங்கள் 136,000க்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்கள், 2025ஆம் ஆண்டுக்கான செலவை 10 பில்லியன் டொலர் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. அவற்றின் ஓர் அங்கமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செலவைக் குறைக்கும் முயற்சி இடம்பெறுகிறது.
இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரியான பேட் கெல்சிங்கர், செலவு அதிகரித்து லாபம் குறைந்ததே வருவாய் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறினார். 2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டுக்குமான அந்நிறுவனத்தின் வருவாய் 24 பில்லியன் டொலர் சரிந்தது. அதேவேளை, அந்தக் காலகட்டத்தில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்தது.
இதற்கிடையே, சிஸ்கோ, உலகளவில் இருக்கும் தனது ஊழியர்களில் ஏழு சதவீத்த்தினரை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு போன்ற அதிக வளர்ச்சி காணப்படும் துறைகளில் அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும் வேளையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாண்டு இரண்டாவது முறையாக சிஸ்கோ ஆட்குறைப்பு செய்யவிருக்கிறது.
ஐபிஎம், சீனாவில் உள்ள அதன் ஆய்வு, மேம்பாட்டுப் பிரிவை மூடியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் பணியாற்றிய 1,000க்கும் மேற்பட்ட அதன் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம், தனது சேவைப் பிரிவில் பணியாற்றிய சுமார் 100 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. டெல், இன்ஃபினியோன், கோபுரோ உள்ளிட்ட பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்துள்ளன.