செம்மணி புதைகுழி விவகாரம் – வெள்ளநீரை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
செம்மணி புதைகுழி வழக்கில், ஏற்கனவே அகழ்வு இடம்பெற்ற புதைகுழி பகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவது தொடர்பாக, இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கின் தீர்மானங்கள் தொடர்பில், செம்மணி புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் ரனிதா ஞானராஜா
மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி புதைகுழி வழக்கு, இன்றைய தினம் (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது, அகழ்வு பிரதேசத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதுடன், இன்று மாலை மூன்று மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி தலைமையில், சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்துமயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வு இடம்பெறும் இடத்தினை நேரில் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது, ஏற்கனவே அகழ்வு இடம்பெற்ற பிரதேசத்தில் வெள்ளநீர் புகுந்து, அகழ்வு பகுதி முழுமையாக நீர் நிறைந்து காணப்படுவதால், அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தேங்கியுள்ள வெள்ளநீர் வற்றும் வரை காத்திருந்து அகழ்வு பணிகளை தொடங்க வேண்டும் அல்லது தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்,
தேங்கியுள்ள வெள்ளநீரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நல்லூர் பிரதேச சபையின் மூலம் வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வெள்ளநீர் அகற்றப்பட்ட பின்னர், அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், புதைகுழி அமைந்துள்ள சித்துபாத்தி இந்துமயானத்தின் உட்புறத்தில் ஏற்கனவே இருந்த பாதையை நல்லூர் பிரதேச சபையினர் செப்பனிட்டுள்ளமை தொடர்பாகவும்,
புதைகுழி அமைந்துள்ள வளாகத்தில் நிலப்பாங்கு தொடர்பான எந்தவிதமான அபிவிருத்திகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும்
இன்றைய தினம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், முழுமையாக அகழ்வு பணிகள் நிறைவடையும் வரையில் நிலத்தின் தோற்றத்தில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இனிவரும் காலங்களில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த புதைகுழி வழக்கு மீண்டும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.





