பங்களாதேஷில் ஆட்சி கலைப்புக்குப் பின்னும் நீடித்த வன்முறைகளில் 232 பேர் பலி!
பங்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு திங்களன்று (ஆக.5) கவிழ்ந்ததில் இருந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் மட்டும் 232 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரையிலான போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது.
பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், ஒரு நாட்டையே நிலைகுலையச் செய்தது. இந்தப் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்தப் போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கியது. பின்னர் அமைதி நிலையான சூழல் திரும்பியது. அதன்பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்து, அரசையே கலங்கடித்தது. பின்னர், ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவின் தஞ்சம் அடைந்தார். அதன்பின்பும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து, ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் திங்களன்று கவிழ்ந்ததில் இருந்து நீடித்த வன்முறைகளில் 232 பேர் பலியாலியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நாட்டில் இதுவரையிலான உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு 328 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதாவது, ஜூலை 16ம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 4ம் திகதி வரை 328 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 23 நாள் போராட்டத்தில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை (07) மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காசிப்பூரில் உள்ள காஷிம்புர் உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியதாகவும், அவர்களை தடுத்து நிறுத்த அதிகாரிகள், அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வன்முறையை கண்டு அஞ்சிய பொலிஸ் அதிகாரிகள் பெரும்பாலானோர், தங்களது பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் பொலிஸ், அனைத்து காலவர்களும் 24 மணி நேரத்துக்குள் தங்களது பணிக்கு வந்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார். பெரும்பாலான பிரதான சாலைகளில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து பொலிஸார் பணியில் இல்லை. மாணவர்கள் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பிரதான சாலைகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக போக்குவரத்து போலிஸாராக பணியாற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.