யாழ்ப்பாணத்தில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இராணுவத் தளம் அமைத்துள்ள 23 ஏக்கர் காணி இந்த வாரத்திற்குள் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்திடம் கையளிக்கப்படும் என கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவப் பிரிவினர் மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் வசாவிளான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரால் இந்த நிலம் பயன்படுத்தப்பட்டது.
கடந்த வாரம் ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தின் போது தற்போது பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் 3000 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த காணிகளை மக்களிடம் கையளிக்கும் வகையில் வேலிகள் அகற்றுதல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காணிகளில் இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எதனையும் அகற்றுவதில்லை என இராணுவம் தீர்மானித்துள்ளது.
வசாவிளான் பகுதியில் உள்ள இந்த காணி யாழ்.மாவட்ட செயலகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தின் காணி பயன்பாட்டுக் குழு அந்த காணிகளின் உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளது.