வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு!
வங்காளதேசத்தில் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் ஞாயிற்று கிழமை காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இந்த நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புதிய நோயாளிகளில் 1,064 பேர் டாக்கா நகரில் உள்ள மருத்துவமனையிலும் மற்றவர்கள் வேறிடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதே காலகட்டத்தில், டெங்கு பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 176 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.
வங்காளதேசத்தில் மொத்தம் 7,175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 4,149 பேர் டாக்காவில் உள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் நடப்பு ஆண்டில் இதுவரை 32,977 பேர் பாதிக்கப்பட்டும், 25,626 பேர் குணமடைந்தும் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 2019ம் ஆண்டில் 179 பேர் உயிரிழந்த நிலையில்,2022 தம் ஆண்டு இந்த எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது. எனினும் நடப்பு ஜூலையில் இந்த பாதிப்பு மோசமடைந்து உள்ளது.
கடந்த 21 நாட்களில் 109 பேர் உயிரிழந்தும், 20,465 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டும் உள்ளது. வருகிற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.