212 ஓட்ட வெற்றியிலக்கை இலகுவாக வீழ்த்திய மும்பை அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடெ மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
கடைசி ஓவர் வரை விளையாடிய ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்களை குவித்தார். இவரது அதிரடி காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 3 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் 28 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 26 பந்துகளுக்கு 44 ரன்களை குவித்து அசத்தினார்.
இவருடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 29 பந்துகளில் 55 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் நிலைத்து ஆடிய திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கடைசி ஓவரில் மும்பை அணி வெற்ற பெற 17 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
கடைசி ஓவரில் டிம் டேவிட் அதிரடியாக ஆடி முதல் மூன்று பந்துகளில் மூன்று சிக்சர்களை அடித்து மும்பைக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்.