இலங்கை: 2024 சர்வதேச திரைப்பட விழா: வெளியான அறிவிப்பு
தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூட்டு முயற்சியின் கீழ் கொழும்பு சர்வதேச திரைப்பட விழா இந்த வருடம் ஜூலை 08-14 வரை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, தேசிய திரைப்படத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கி, இலங்கையை தெற்காசியாவின் சுற்றுலா மையமாக மாற்றுவதன் மூலம் இலங்கையில் உலகளாவிய ஒளிப்பதிவை பிரபலப்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் இந்த திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட விழாவில் ஈரான், பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து விருது பெற்ற திரைப்படங்களை இலங்கை பார்வையாளர்கள் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், திரைப்பட மாணவர்கள் உலகளாவிய ஒளிப்பதிவு பற்றிய பரந்த புரிதலையும் அனுபவத்தையும் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதன்படி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முயற்சியின் கீழ் மேற்படி திரைப்பட விழாவை நடத்துவதற்கு வெகுஜன ஊடகம் மற்றும் சுற்றுலா அமைச்சர்கள் முன்வைத்த ஒன்றிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.