24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கும் நோக்கில் புதிய தேசிய வேலைத்திட்டம்: சஜித் உறுதி
பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கும் நோக்கில் புதிய தேசிய வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஜனசவிய, சமுர்த்தி, அஸ்வெசும மற்றும் கமிதிரிய போன்ற முயற்சிகளின் பலத்தைப் பயன்படுத்தி புதிய தேசிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய வறுமை ஒழிப்புத் திட்டம் உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளுக்கான நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
“தற்போதைய அரசாங்கத்தின் அபத்தமான கொள்கைகளாலும் நாட்டை திவாலாக்கிய தலைவர்களாலும் இலட்சக்கணக்கான மக்கள் எமது நாட்டில் வறுமையில் வாடுகின்றனர்.
தெளிவான வருமான ஆதாரம் இல்லாத மற்றும் மூன்று வேளை உணவு சாப்பிட முடியாத ஏழை மக்களுக்காக புதிய வறுமை ஒழிப்பு தேசிய திட்டம் செயல்படுத்தப்படும்,” என்றார்.
வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் குடும்பத்தை நடத்தும் பெண்களுக்கு நன்மைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
கந்தளாய், சேருவில நகரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, SJB ஜனாதிபதி வேட்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.