காரை வேகமாக ஓட்டி 3 பேர் கொண்ட குடும்பத்தை கொன்ற 20 வயது சீன இளைஞர்

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 20 வயது சீன நபர் ஒருவர், பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டி, மூன்று பேர் கொண்ட குடும்பத்தை கொன்று, ஒரு கொடிய விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
டெஸ்லா காரில் மணிக்கு 129 கிமீ வேகத்தில் சென்ற அவர், 31 வயது தந்தை, 30 வயது மனைவி மற்றும் ஒரு வயதுடைய அவர்களின் குழந்தை மகன் மீது மோதினார்.
குடும்பத்தினர் ஒரு விருந்தில் கலந்து கொள்ள சாலையைக் கடக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. தாயும் குழந்தையும் உடனடியாக இறந்தனர், தந்தை மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.
விபத்தைத் தொடர்ந்து, குற்றவாளி லியாவோவும் அவரது குடும்பத்தினரும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டனர். லியாவோவின் தந்தை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மிரட்டி, “என் மகன் உங்கள் மகனைக் கொன்றது கடவுளின் செயல்; நீங்கள் என் மகன் மீது வழக்குத் தொடுப்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
லியாவோவின் குடும்பத்தினரிடமிருந்து 800,000 யுவான் இழப்பீடு வழங்க முன்வந்ததை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நிராகரித்தனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு பாதிக்கப்பட்டவர்களின் வயதான பெற்றோரை லியாவோ கவனித்துக்கொள்வார் என்ற திட்டத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.