குஜராத் தொழிற்சாலையில் நச்சுப் புகையை சுவாசித்த 2 தொழிலாளர்கள் மரணம்
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் நச்சுப் புகையை சுவாசித்ததால் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர் மற்றும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
நகரின் நரோல் தொழிற்துறை பகுதியில் உள்ள தேவி சிந்தெடிக்ஸ் நிறுவனத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொழிற்சாலையில் உள்ள ஒரு தொட்டியில் ஆசிட் மாற்றப்பட்டபோது கசிந்த நச்சுப் புகையை ஒன்பது தொழிலாளர்கள் சுவாசித்ததாக காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) ரவி மோகன் சைனி தெரிவித்தார்.
“நரோலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவு காரணமாக ஒன்பது பேர் பாதிக்கப்பட்டு எல்ஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் உயிரிழந்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஏழு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் ICUவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறை, தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய (ஜிபிசிபி) அதிகாரிகளின் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சரியான காரணத்தை ஆராயத் தொடங்கியுள்ளது.