மலேசியாவில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள் – அனைவரும் உயிரிழப்பு
மலேசியாவில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரச மலேசியக் கடற்படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்களே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் உள்ள லுமுட் கடற்படை அரங்கத்தில் விபத்து நிகழ்ந்தது. 2 ஹெலிகாப்டர்களிலும் 10 பேர் இருந்தனர். அவர்களில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று கடற்படையின் அறிக்கை கூறியது.
விபத்து பற்றிப் புலனாய்வு நடத்த விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது. அடையாளம் காண்பதற்காகச் சடலங்கள் லுமுட் கடற்படைத் தள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
மே மாதம் நடைபெறவிருக்கும் 90ஆவது கடற்படை தினத்தை முன்னிட்டு அந்த 2 ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரை இடித்து, பின்னர் இரண்டும் கீழே நொறுங்கி விழும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.
ஒரு ஹெலிகாப்டர் அரங்கத்தின் படிக்கட்டுகள் அருகே விழுந்தது; மற்றொன்று அரங்கத்தின் நீச்சல் குளத்தில் விழுந்தது.
அந்த 2 ஹெலிகாப்டர்களும் இன்று காலை 9.03 மணியளவில் லுமுட் கடற்படைத் தளத்துக்கு அருகே உள்ள சித்தியவான் (Sitiawan) விமானத் திடலில் இருந்து புறப்பட்டன.
ஒரு ஹெலிகாப்டரில் 3 பேரும், மற்றொன்றில் 7 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.