160 வருட வரலாற்றில் HSBCயின் 1வது பெண் தலைமை நிதி அதிகாரி
HSBC வங்கி தனது 160 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாம் கவுரை அதன் புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) நியமித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற ஜார்ஜஸ் எல்ஹெடெரிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 1, 2025 முதல் இயக்குநர்கள் குழுவின் நிர்வாக இயக்குனராக பாம் கவுர் பணியாற்றுவார் என்று HSBC வங்கி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
60 வயது கவுர், தணிக்கை, இடர் மேலாண்மை மற்றும் இணக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக வங்கி அனுபவம் பெற்றவர்.
பாம் கவுர், எர்ன்ஸ்ட் & யங்கில் பட்டயக் கணக்காளராகத் தகுதி பெற்றார் மற்றும் சிட்டி வங்கியில் உள் தணிக்கையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ஏப்ரல் 2013 இல் HSBCயில் உள் தணிக்கை குழுத் தலைவராக சேர்ந்தார் மற்றும் ஜனவரி 2020 இல் குழுவின் தலைமை இடர் அதிகாரியானார், ஜூன் 2021 இல் இணக்கத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்த பதவிக்கு பாம் கவுர் ஆண்டு அடிப்படை சம்பளமாக 8.3 கோடி பெறுவார்.நிலையான ஊதியம் 8.7 கோடி மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவாக 64 லட்சம் பெறுவார்.