179 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
23 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் மொயீன் அலி 23 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள், அம்பதி ராயுடு 12 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஆக இருந்தது. அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 19 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின் கேப்டன் டோனியுடன் சான்ட்னர் இணைய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கேப்டன் டோனி 7 பந்துகளில் 14 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்குகிறது.