சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப் பரிசை வென்ற 17 வயதான ஆஃப்கானியச் சிறுமி
சொந்த நாட்டில் பொது இடத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்ட 17 வயது ஆப்கானியச் சிறுமி, தன் நாட்டுச் சிறுமிகளின் உரிமைகளுக்குப் போராடியதற்காக அனைத்துலக விருதை வென்றுள்ளார்.
நிலா இப்ராஹிமி, குழந்தைகளுக்கான அனைத்துலக அமைதிப் பரிசை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வென்றுள்ளார்.
இதற்குமுன் பருவநிலை ஆர்வலரான கிரேத்தா தன்பர்க், பெண் குழந்தைகளின் கல்விக்குப் பிரசாரம் செய்த மலாலா யூசஃப்சாய் போன்றோர் இத்தகைய விருதைப் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான் தரப்பு, பெண்களின் பேச்சுரிமையை ஒடுக்கியுள்ள நிலையில், சிறுமிகளின் உரிமைகளுக்காகப் போராடும் துணிச்சலான பணிகளுக்காக இப்ராஹிமி அந்த விருதைப் பெற்றுள்ளார்.
தலிபான்கள் ஆட்சிக்கு வருமுன், பள்ளி மாணவிகள் பொது இடத்தில் பாடுவதற்கான தடையை அகற்றக் கோரி கல்வித் துறை அதிகாரிகளுக்கு இப்ராஹிமி நெருக்குதல் தந்தார். இணையத்தில் அதற்கான ஆதரவு பெருகியது.தானே பாடி அவர் பதிவு செய்த காணொளியை இப்ராஹிமியின் சகோதரர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அவரது பிரசாரப் பாடலுக்கு (IAmMySong) ஆதரவு வலுக்கத் தொடங்கிய வேளையில் சில வாரங்களில் அந்தத் தடை அகற்றப்பட்டது.
தலிபான்கள் காபூலில் ஆட்சியைக் கைப்பற்றியபோது இப்ராஹிமிக்கு 15 வயது.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஓர் அறநிறுவனத்தின் உதவியுடன் அவரும் அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கனடா சென்றனர். கனடாவிலிருந்தபடி நிலா இப்ராஹிமி, ஆப்கானியச் சிறுமிகளுக்காகப் போராடினார்