இந்தியாவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 17 பேர் உயிரிழந்துவிட்டனர்.
செவ்வாய்க்கிழமை அன்று குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரம் அருகே அந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு பட்டாசுகளைச் சேமித்து வைக்கும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரி கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தீ விபத்தின்போது அந்தக் கிடங்கு செயல்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன.
தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் தீசா நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 108 அவசர வாகனச் சேவை, மாவட்ட நிர்வாகம், தீசா நகராட்சியின் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசரகால குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் உயிரிழந்தோரின் உடல்களையும் மீட்டு வருவதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.