மத்திய உக்ரைன் நகரில் ரஷ்யத் தாக்குதலில் மீட்புப் பணியாளர் உட்பட 17 பேர் காயம்
உக்ரேனில் சனிக்கிழமை ( 19) இரவு ரஷ்யா பரவலாக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தோரில் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரிவ்யி ரிஹ் நகரில் பணியாற்றிய மீட்புப் பணியாளரும் அடங்குவார் என்று அதிகாரிகள் கூறினர். அவர்களில் எட்டுப் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய உள்துறை அமைச்சு கூறியது.
அந்நகரின் அலுவலகக் கட்டடம் ஒன்றுடன் சில குடியிருப்புகளும் கார்களும் சேதமடைந்ததாக அமைச்சு தெரிவித்தது. சிறிது நேரம் பற்றியெரிந்த தீயில் அவசரகால சேவைக் கருவிகள் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.
இத்தகவல்களைச் சரிபார்க்க இயலவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சொன்னது. ரஷ்யா இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.
மேலும், தலைநகர் கியவ், போலந்து எல்லையில் உள்ள லிவவ் நகர் போன்ற பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
கியவ் நகருக்கு அருகே ஏறக்குறைய 10 ஆளில்லா வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அந்நகரின் ராணுவ நிர்வாகம் டெலிகிராமில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் உயிருடற் சேதம் குறித்துத் தகவல் இல்லை என்று அது கூறியது.
முன்னதாக, ஜி-7 நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் அக்டோபர் 19ஆம் திகதி இத்தாலியில் நடத்திய சந்திப்பில், நேட்டோ கூட்டணியில் உக்ரேன் நிரந்தரமாக இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்தன.
இவ்வேளையில், அடுத்த வாரம் ரஷ்யாவில் நடைபெறும் BRICS உச்சநிலை மாநாட்டில் 24 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வர் என்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கப் போக்கிற்குச் சவால் விடுக்கும் வகையில் அது அமையும் என்றும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.