இலங்கையில் அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள் – ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்காக ஆசிரியர் பற்றாக்குறைக்காக 199 நியமனங்கள், சப்ரகமுவ மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்காக 3661 நியமனங்கள் உட்பட சுமார் 6000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் பொது நிர்வாக அமைச்சின் கீழ் 1658 நியமனங்களும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் தபால் சேவை என்பவற்றுக்கு சுமார் 300 நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.
இவற்றை உள்ளடக்கி 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.