காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் பலி
காஸாவில் ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். வடக்குப் பகுதியில் உள்ள வீடுகள் வெடித்துச்சிதறின.
காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள ‘நுசைரத்’ முகாமில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் வீடு ஒன்றில் இருந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.அதோடு, காஸா சிட்டியில் இருந்த வீடு ஒன்றில் நடந்த மற்றொரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கான் யூனிஸ் பகுதியில் உள்ள கூடார முகாமை ஏவுகணை தாக்கியபோது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். ராஃபா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹமாஸ் தலைவர்கள் கைரோவில் பேச்சு நடத்தியுள்ளனர். பாலஸ்தீன சிறைக்கைதிகளுக்குக் கைமாறாக, இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் விடுதலையை உறுதிசெய்யும் உடன்படிக்கையை இஸ்ரேலுடன் செய்துகொள்வதற்கான வழிகளை ஆராய்வதே பேச்சின் நோக்கம்.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையைச் செய்துகொள்ள ஹமாஸ் முன்வருகிறது. இருப்பினும், ஹமாஸ் அழிக்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்குவரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறிவருகிறார்.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 44,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் உள்ள மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஸாவின் பெரும்பாலான பகுதிகளில் அழிந்துவிட்டது.