பிரேசிலில் (Brazil) காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் 132 பேர் பலி – ஐ.நா கண்டனம்!
பிரேசிலின் (Brazil) ரியோ டி ஜெனிரோவில் ( Rio de Janeiro) போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறைந்தது 132 பேர் கொல்லப்பட்டதாக மாநில பொது பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 2,500 காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையில் 93 துப்பாக்கிகள் மற்றும் அரை டன்னுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 60 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொது பாதுகாப்பு அலுவலகம் 40 பேரின் உடல்களை கையளித்த பிறகு உண்மையான தரவுகளை வெளியிட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அலுவலகம் இறப்பு எண்ணிக்கையை 132 என்று அறிவிப்பதற்கு முன்பே, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.
இதற்கிடையில் காவல்துறையினரின் இந்நடவடிக்கை தொடர்பில் மனித உரிமைகள் அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.





