பாகிஸ்தானில் சாக்லேட் திருடியதற்காக உரிமையாளர்களால் அடித்தே கொல்லப்பட்ட 13 வயது சிறுமி!

பாகிஸ்தானில் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த 13 வயது சிறுமி, சாக்லேட்டுகளைத் திருடியதற்காக உரிமையாளர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் ரஷீத் குரேஷி, அவரது மனைவி சனா வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டு வேலைக்காக சிறுமி ஒருவரை பணியில் அமர்த்தி இருந்தனர். பணியில் அமர்த்தப்பட்ட சிறுமியின் தந்தை ஒரு விவசாயி. அவருக்கு அதிகப்படியான கடன் இருந்ததால், 8000 ரூபாய் மாத சம்பளத்திற்காக கடந்த 5 வருடத்திற்கு முன்பு ரஷீத் குரேஷி வீட்டிற்கு தனது மகளை வீட்டு வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிறுமியின் வயது 13.
இந்நிலையில், சிறுமி, ரஷீத் குரேஷி வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டை தெரியாமல் எடுத்து சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட ரஷீத் குரேஷி மற்றும் அவரது மனைவி சனா இருவரும், அச்சிறுமியின் கைகளை கால்களை கட்டி, தண்ணீர் உணவுக்கொடுக்காமல் சித்திரவதை செய்யப்பட்டதுடன் உருட்டு கட்டையால் பலமாக அடித்ததாகக்கூறப்படுகிறது. இதில் சிறுமி பலத்தகாயமுற்றதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சைக்கு முன்னதாகவே அச்சிறுமி இறந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது, அதில், சிறுமியின் மண்டை ஓடு உடைக்கப்பட்டும், கை கால்களில் பல எலும்பு முறுவு ஏற்பட்டும் அச்சிறுமி இறந்ததாக அறிக்கை வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து, ரஷீத் குரேஷி குடும்பத்தினரால் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி சமூக ஊடகங்கள் ‘#JusticeforIqra’ என்று ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, சிறுமியின் இறப்பிற்கு காரணமான ரஷீத் குரேஷி மற்றும் அவர் மனைவி சனா மற்றும் சிலரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்