பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்
சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.
அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும். அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.
நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.
ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.
பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார். குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.
இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.
“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவருடன் பிபிசி பேச முடிந்தது. ஒருவர் 799 ரூபாயை இழந்ததாகக் கூறினார். ஆனால் பல விவரங்களைப் பற்றி விவாதிக்க அவர் விரும்பவில்லை. ஆனால் மங்கேஷ் மிகவும் எளிமையாக பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பல தொலைபேசி அழைப்புகளின் மூலம், அவர் எப்படி மோசடி செய்பவர்களுக்கு இரையானார் என்பதை வெளிப்படுத்தினார்.
“நான் வீடியோவைக் கிளிக் செய்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, எனது தொலைபேசி ஒலித்தது. நான் வேலைக்குப் பதிவு செய்ய விரும்பினால் 799 ரூபாய் செலுத்துமாறு அந்த நபர் என்னிடம் கேட்டார்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
போனில் அழைத்தவர் – மங்கேஷ் அவரை சந்தீப் சார் என்று அழைக்கிறார் – அவர் மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், சட்டப்படியான ஆவணங்களில் மங்கேஷ் கையெழுத்திட்டவுடன், எந்தப் பெண்ணை அவர் கர்ப்பமாக்க வேண்டும் என்ற விவரங்கள் அவருக்கு அனுப்பப்படும் என்றும் கூறி மங்கேஷை ஏமாற்றியிருக்கிறார்.
அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்காக அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய், கிட்டத்தட்ட மூன்று வருட ஊதியம் அளிக்கப்படும் என்றும், அந்தப் பெண் கருவுற்றால் மேலும் எட்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மங்கேஷிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
“நான் ஒரு ஏழை. எனக்கு நிச்சயமாக பணம் தேவை. அதனால் நான் அவர்களை நம்பினேன்” என்று இரண்டு சிறுவர்களின் தந்தையான மங்கேஷ் என்னிடம் கூறினார்.
அடுத்த இரண்டு வாரங்களில், மங்கேஷிடம் 16,000 ரூபாய் – சில சட்டப்பூர்வமான ஆவணங்களைப் பெற 2,550 ரூபாய், பாதுகாப்பு வைப்புத் தொகையாக 4,500 மற்றும் 7,998 ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) அளிக்க வேண்டும் என ஆசைவார்த்தை கூறப்பட்டது.
“அவர் அனைத்து ரசீதுகள் மற்றும் போலியான சட்ட ஆவணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதிகாரப்பூர்வமான ஆவணங்களாகத் தோற்றமளிக்கும் ஆவணத்தில் அவரது பெயர் அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அவரது புகைப்படத்துடன் போலீஸ் சீருடையில் உள்ள ஒரு நபரின் புகைப்படமும் இருந்தது. மேலே பெரிய அச்சு எழுத்துக்களில், “குழந்தை பிறப்பு உடன்படிக்கை” என்றும், கீழே உள்ள நேர்த்தியான அச்சில் “கர்ப்ப சரிபார்ப்பு படிவம்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
“ஆவணத்தின் முடிவில் இருந்த கையொப்பம் அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் கையெழுத்தை ஒத்திருக்கிறது.”
மோசடி செய்பவர்கள் அவருக்கு “ஏழு-எட்டு பெண்களின்” புகைப்படங்களை அனுப்பி, அவர் கருத்தரிக்க விரும்பும் ஒருவரைத் தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டனர். “நான் வசித்த ஊரில் ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்து தருவதாகவும், அந்தப் பெண்ணை அங்கே சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சொன்னார்கள்,” என மங்கேஷ் தெரிவித்தார்.
வாக்குறுதியளித்தபடி பணம் கொடுக்குமாறு மங்கேஷ் தொடர்ந்து கேட்டபோது, அவரது வங்கிக் கணக்கில் 5,12,400 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக அவருக்கு ரசீது அனுப்பினார்கள். ஆனால் பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவர் வருமான வரியாக 12,600 ரூபாய் செலுத்திய பிறகு பணம் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள்.
அதற்குள், ஒரு மாத சம்பளம் முழுவதையும் இழந்துவிட்டதாகவும், அதற்கு மேல் பணம் கொடுக்க முடியாது என்றும், பணத்தைத் திரும்பக் கேட்டதாகவும் மங்கேஷ் கூறுகிறார்.
“ஆனால் சந்தீப் சார் மறுத்துவிட்டார். நான் கோபமடைந்த போது, எனது வங்கிக் கணக்கில் 5,00,000 ரூபாய் வரவு இருந்ததால், வருமான வரி அதிகாரிகள் என் வீட்டில் சோதனை செய்து என்னைக் கைது செய்வார்கள் என்று என்னை பயமுறுத்தினார்.”
“நான் ஒரு ஏழைத் தொழிலாளி. அவர்களிடம் நான் ஒரு மாத ஊதியத்தை இழந்தேன். நான் எந்த கிரிமினல் வழக்கிலும் சிக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் மிகவும் பயந்தேன். அப்போது நான் 10 நாட்களுக்கு எனது தொலைபேசியை அணைத்துவிட்டேன். சில நாட்களுக்கு முன்புதான் நான் அதை மீண்டும் ஆன் செய்தேன்,” என்றார் மங்கேஷ். உண்மையில் நான் அவரிடம் பேசத் தொடங்கிய போது, நானும் அந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் தான் என எண்ணிப் பயந்திருக்கிறார்.
காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்தின் கூற்றுப்படி, இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் படித்தவர்கள் – சிலர் பட்டதாரிகளும் கூட – அவர்களுக்கு மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிரிண்டர்களில் எப்படி வேலை செய்வது என்று நன்றாகத் தெரியும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா முழுவம் இருப்பதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் குறைந்த அளவு கல்வி கற்றவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மங்கேஷ் தொடர்ந்து பேசுகையில், “சந்தீப் சார்” தனது அடையாள அட்டையின் நகல்களை அனுப்பியதால், இது ஒரு மோசடியாக இருக்கும் என்று அவர் சந்தேகப்படவில்லை. அவரைத் தொடர்பு கொண்டவரின் வாட்ஸ்அப் டிஸ்பிளேயில் இருந்த புகைப்படம் – ஒரு கவர்ச்சியான வெளிநாட்டுப் பெண் புதிதாகப் பிறந்த குழந்தையைத் தன் கைகளில் ஏந்தியிருக்கும் காட்சி – நிச்சயமாக உண்மையானது தான் என்றும் அவர் நம்பினார்.
“அந்த புகைப்படத்தை எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்று சொல்லுங்கள்?” என மங்கேஷ் அப்பாவியாக ஒரு கேள்வியை எழுப்பினார்.
பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் உள்ள மக்கள், “பெரிய அளவில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்களாகவும், இணையத்தில் உள்ள தகவல்கள் உண்மையானவை தானா என்பதை சுயாதீனமாக சரிபார்ப்பதை அரிதாகவே மேற்கொள்கிறார்கள் என்பது தான்,” என்று இணைய சட்ட நிபுணர் பவன் துகல் விளக்குகிறார். இதற்கு, நமக்கு எந்த ஆபத்து நேரிடப் போகிறது என்ற அவர்களின் பாதுகாப்பின் மீதான அதீத நம்பிக்கைதான் காரணமாக இருக்கிறது.
இருப்பினும், நவாடாவில் நடந்த இந்த விநோத மோசடி “மிகவும் புதுமையானது” என்று அவர் கூறுகிறார்.
“இலவசப் பணம் மற்றும் இலவச உடலுறவு என்ற வாக்குறுதியுடன் மோசடி செய்பவர்கள் அவர்களை கவர்ந்திழுக்கின்றனர். இது ஒரு கொடிய கலவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில், விவேகமும், சிந்தனைத் திறனும் பெரும்பாலும் முன்வருவதே இல்லை.”
ஆனால் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்ட போது, பணப் பரிமாற்றத்துக்கு செல்போன் மற்றும் நெட் பேங்கிங் பெருமளவு வழக்கமாக மாறியது என்றும், “சைபர் குற்றத்தின் பொற்காலம் அப்போது தான் தொடங்கியது” என்றும் விளக்கும் துகல், “இது பல ஆண்டுகளுக்குத் தொடரும்,” என்றும் எச்சரிக்கிறார்.
சைபர் குற்றவாளிகள் புதிய, புதுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை கொண்டு வருவதால், மங்கேஷ் போன்றவர்களை மோசடி செய்பவர்களுக்கு இரையாவதிலிருந்து பாதுகாக்க இந்தியா கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
“மக்கள் அரசாங்கத்தை அதிகம் நம்புவதால், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் இன்னும் நிறைய செய்ய வேண்டும்.”
ஆனால் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் ஒவ்வொருவரையும் அரசாங்கத்தால் மட்டுமே சென்றடைய முடியாது.
கால் சென்டர் போதைப்பொருள் மோசடியில் இந்தியா டஜன்கணக்கானவர்களை இதுவரை கைது செய்துள்ளது
ஏர் இந்தியா சர்வர் மீதான சைபர் தாக்குதல் லட்சக்கணக்கான பொதுமக்களை பாதிக்கிறது
“குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. அவற்றில் பாதிக்கப்படுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்து இருப்பது மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதுடன் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து இதுபோன்ற செயல்களால் பாதிக்கப்படும். எனவே இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் தனியார் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், மோசடி செய்பவர்கள் மங்கேஷை இன்னும் பின்தொடர்கின்றனர்.
கடந்த வாரம் மங்கேஷ் என்னுடன் தொடர்பில் இருந்தபோது, அவர் “மேடம்” அழைக்கிறார் என்று என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவரைச் சந்திக்க வைப்பதாக உறுதியளிக்கப்பட்ட பெண் அவர் தான் என அவர் பின்னர் எனக்கு விளக்கினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் அவர் பேசியபோது, அவர் கிட்டத்தட்ட தினமும் அந்தப் பெண்ணிடம் பேசுவதாகக் கூறினார்.
அந்தப் பெண் இப்போது மங்கேஷிடம் “சந்தீப் சார்” தான் உண்மையான ஏமாற்றுப் பேர்வழி என்றும், மங்கேஷுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாயில் பெரும்பகுதியை “சந்தீப் சார்” திருடிவிட்டதாகவும், ஆனால் மங்கேஷ் ஜிஎஸ்டியாக 3,000 ரூபாய் செலுத்தினால் இன்னும் 90,000 ரூபாய் கிடைக்கும் என்றும் கூறுகிறார்.
“நான் உடைந்துவிட்டதாக அந்தப் பெண்ணிடம் சொன்னேன். என் பணத்தைத் திருப்பித் தரும்படி அவரிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் அது முடியாது என்று சொன்னார். இருப்பினும் அந்தப் பெண் குறைந்தபட்சம் 10,000 ரூபாயையாவது திருப்பித் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று மங்கேஷ் என்னிடம் கூறினார்.
அவர் இன்னும் மோசடி செய்பவர்களை நம்புகிறாரா என்று நான் அவரிடம் கேட்டேன்.
“இப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாத ஊதியத்தை இழந்துவிட்டேன், பீகாரில் உள்ள எனது குடும்பத்திற்கு பணம் எதுவும் அனுப்ப முடியவில்லை. என் மனைவி மிகவும் கோபமாக இருக்கிறார். அவர் இப்போது என்னிடம் பேசுவதில்லை.”
இந்நிலையில், “சந்தீப் சார்” தன் அழைப்பை எடுக்கவில்லை என்று மங்கேஷ் கோபமாக இருக்கிறார்.
“என்னை ஏமாற்றியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். 500 ரூபாய்க்கு நான் நாள் முழுவதும் முதுகுத்தண்டு முறிய வேலை செய்கிறேன். நான் ஒரு பெரிய தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் எனக்குச் செய்த துரோகம் அதைவிடப் பெரிய தவறு.” என்று மங்கேஷ் குமுறுகிறார்.
(பிபிசி)