கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது

போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையின் யு.எல் – 225 விமானத்தில் துபாய்க்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.
அந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசாக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.