இலங்கையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது
வெலிகந்த, நாமல்கம பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வு முயற்சி அல்லது குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் இருவர் உட்பட 11 பேர் மூன்று மோட்டார் வாகனங்கள் மற்றும் ஒரு கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பதுளையைச் சேர்ந்த ஒருவர் போலி அடையாள அட்டை, இராணுவ சீருடைகள் மற்றும் பிரிகேடியர் அணிந்திருந்த ஆடை போன்றவற்றை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றைய இரு இராணுவத்தினரும் திருகோணமலை ஹென்றிக் கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஞ்சிய எட்டு சந்தேக நபர்களும் யக்கல, பாதுக்க, கலேவெல, மில்லவ மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வெலிகந்த பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பொல்ஹெங்கொடை இராணுவ முகாமில் இருந்து வெலிகந்த பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, முகாமின் அதிகாரிகள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் இராணுவத்துடன் தொடர்புடையவர் அல்ல என்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.