வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கடத்தும் கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலில் 11 பேர் பலி ; டிரம்ப்

தென் அமெரிக்கா நாடுகளான மெக்சிகோ, வெனிசுலா, சிலி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து தென்அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒழிப்பதாக கூறினார்.
குறிப்பாக, வெனிசுலா நாட்டில் 3-வது முறையாக அதிபராக உள்ள நிகோலஸ் மதுரோ, உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக செயல்படுவதாக விமர்சித்தார். போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து அமெரிக்காவுக்கு தொடர்ந்து போதைப்பொருள் கடத்துவதாக குற்றஞ்சாட்டினார். வெனிசுலா அதிபரின் இரட்டை வேடத்தை கலைப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் நிகோலஸ் மதுரோவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ரூ.415 கோடி வெகுமதியும் அறிவித்தார். மதுரோவுடன் தொடர்புடைய ‘டெரன் டி அரகுவா’ என்ற அமைப்பை பயங்கவரவாத அமைப்பாக அறிவித்தார். போதைப்பொருள் கடத்தலை தடுக்க அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட தீவுநாடுகளான கரீபியன் தீவுகளில் அமெரிக்க ராணுவத்தின் போர் கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் ரோந்துபணியின்போது டெரன் டி அரகுவா அமைப்புக்கு சொந்தமான வெனிசுலா கப்பல் ஒன்று அமெரிக்க எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக அமெரிக்க போர்விமான ரேடாரில் தெரிந்தது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதனை சுட்டு வீழ்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அட்லாண்டிக் தீவுக்கடலில் தயாராக நின்ற அந்த போர்க்கப்பல் வெனிசுலா கப்பல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பல் நடுகடலில் வெடித்து சிதறி மூழ்கியது இந்த தாக்குதலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை உறுதிசெய்தார். ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தை வெனிசுலா தகவல் தொடர்புத்துறை மந்திரி முற்றிலுமாக மறுத்துள்ளார்.