AI தொழில்நுட்பத்தில் 10 வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்
தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் 2033ல் மனிதர்களுடைய வாழ்க்கையில் AI எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, AI சாபாட் கொடுத்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது பயணத்தை வேகமாகத் தொடங்கிய AI, தொடக்கத்தில் ஆய்வாளர்களும் சில தொழில்நுட்ப வல்லுனர்களும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது 21ம் நூற்றாண்டில் எல்லா தரப்பு மக்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதனுடைய வளர்ச்சி நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கே தெரியாமல் இது அங்கமாக மாறி வருகிறது.
இப்படி இருக்கும் சூழலில் 2033ல் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என BARD சாட்பாட்டிடம் கேட்ட கேள்விக்கு, அது தனித்துவமான பல பதில்களைக் கொடுத்தது.
2033ல் தற்போது இருக்கும் கணினிகளை விட சிறப்பாக இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி, வணிகம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள் மேற்கொள்ளப்படும். இது மேலும் புதிய வகையான AI அமைப்புகளை உருவாக்கப் பயன்படும். இது அதித்திறன் கொண்டதாக இருக்கும்.
அடுத்ததாக ஆர்டிபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் மனிதர்களுக்கு நிகரான நுண்ணறிவுத் திறன் அல்லது அதற்கும் மேலான திறன் கொண்ட வகையில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு உருவாகி இருக்கும். இது மனித சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கம்ப்யூட்டர் விஷன் எனப்படும் எந்திரங்களுக்கு பார்வை கொடுப்பது மூலம், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை இயந்திரங்கள் புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பெறும். இத்தகைய இயந்திரங்கள் மனிதர்களை மிஞ்சி பல பணிகளைச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கும். கிட்டத்தட்ட எந்திரன் திரைப்படத்தில் வரும் ரோபோ போல எல்லா வேலைகளையும் அது செய்யும். 2033ல் ரோபோக்கள் அதிக பயன்பாட்டில் இருக்கும்.
மக்களின் வீடுகளும், பணியிடங்களும் AI காரணமாக ஸ்மார்டாக மாறி இருக்கும். மேலும் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறையில் AI அதிகமாக மேம்பட்டிருக்கும் என BARD தெரிவித்தது.
இப்படி செயற்கை நுண்ணறிவின் எதிர்கால செயல்பாடு நம்மை அசர வைக்கும் என இந்த தொழில்நுட்பம் பதில் அளித்துள்ளது. இருப்பினும் இதனால் ஏற்படும் அச்சுறுத்தலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதை ஆக்கப்பூர்வமான வகையில் மாற்றுவது பற்றி நாம் சிந்திப்பது அவசியமாகும். இதனால் AI-ன் பயன்பாட்டை மனிதர்களின் நலனுக்காக உறுதி செய்ய முடியும்.