இந்தியாவில் ஆழ்கடலில் தூய்மை பணியில் ஈடுபடும் 10 வயது சிறுமி!
பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் தனது தந்தையுடன் இணைந்து ஆழ்கடலில் தூய்மைப் பணியில் 10 வயதுச் சிறுமி தாரகை ஆராதணா ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த். சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சிப் பள்ளி நடத்தும் இவர் உரிய பயிற்சிகளுடன் ஆழ்கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளையும், வீரர்களையும் அழைத்துச் செல்கிறார்.
கொரோானா காலச் சூழலில் கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆழ்கடலில் செய்துள்ளார்.
அவரது 10 வயது மகள் தாரகை ஆராதணா, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆழ்கடலில் தூய்மைப் பணி செய்கிறார்.
இந்நிலையில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை காரப்பாக்கம் பகுதியில் உள்ள கடலில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆழ்கடல் வீராங்கனையான சிறுமி தாரகை ஆராதனா மற்றும் அவரது குழுவினர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 3,000 கிலோ அளவிற்கு கடலில் இருந்து குப்பைகளை அகற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.