உடலில் இரத்த அளவை அதிகரிக்கும் 10 உணவுகள்..!
இன்றைய தலைமுறையினர் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்த ரத்த சோகை வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புதிய சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாக போதுமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தற்போதைய விரைவு உணவுகளில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக இரும்புச்சத்து. விட்டமின் சி, போலிக் ஆசிட் ,விட்டமின் பி12 ,புரதம் போன்ற சத்துக்கள் உடலில் புதிய ரத்த அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தச் சத்துக்கள் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
உலர் கருப்பு திராட்சை :
இதில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. உலர் கருப்பு திராட்சையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தினமும் இரவில் ஊற வைத்து மறுநாள் அதே தண்ணீருடன் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
மாதுளை பழம் :
பழங்களில் மாதுளையில் தான் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. அது மட்டுமல்லாமல் பல விட்டமின்கள் மற்றும் மினரல்களும் இதில் அடங்கியுள்ளது. தினமும் விதையுள்ள ஒரு நாட்டு மாதுளையை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
பீட்ரூட் :
காய்கறிகளில் பீட்ரூட்டில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பீட்ரூட்டை உணவாகவும், ஜூஸ் ஆகவும் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆட்டு ஈரல் :
ஆட்டு ஈரலில் அதிக அளவு புரதம், விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த மூன்று சத்துக்களும் உள்ள ஒரே உணவு என்றால் அது ஆட்டு ஈரல் தான். இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் 50 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகமாகும்.
சிட்ரஸ் பழ வகைகள் :
ஆரஞ்சு, நெல்லிக்காய், சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழங்களில் விட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. இது நாம் சாப்பிட்ட உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது. மேலும் இரும்புச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது விட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பேரிச்சை :
பொட்டாசியம், இரும்புசத்து மற்றும் பல தாது சத்துக்களும் பேரிச்சையில் உள்ளது. உடலுக்கு உடனே உடனடி எனர்ஜி கொடுக்கக் கூடியது. அனீமியாவால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள பேரீட்சை உதவுகிறது. அதனால் தினமும் நான்கிலிருந்து ஐந்து பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்வது சிறந்தது.
அத்திப்பழம் :
உலர்ந்த அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
முட்டை:
முட்டைகளில் நாட்டு கோழி முட்டை மிகவும் சிறந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் 100% சுத்தமான புரதம் மற்றும் கொழுப்பு அடங்கியுள்ளது. மேலும், மஞ்சள் கருவில் போலிக் ஆசிட்டும் நிறைந்துள்ளது. ரத்தம் அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம்.
காய்கறி சூப் :
வாரத்தில் மூன்று நாட்கள் ஆவது அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வரலாம். இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகிதத்தில் கிடைக்க செய்கிறது. மேலும், ஆட்டுக்கால் சூப் குடிப்பது மூலம் எலும்புகள் வலுவடைகிறது. புதிய ரத்தம் எலும்புகளில் தான் உருவாகின்றது. அதனால் எலும்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியம்.
கீரை வகைகள் :
பொதுவாகவே அனைத்து வகை கீரைகளிலுமே இரும்புச்சத்து உள்ளது. அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரை, முருங்கைக்காய் போன்றவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. தினமும் காலையில் கீரை உணவாக இந்த முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்வதால் உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் காபி, டீ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் உள்ள ரசாயனம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்ச விடாமல் தடுக்கிறது. மேலும், மது அருந்துதல், பதப்படுத்தப்ட்ட கூல் ட்ரிங்க்ஸ் குடித்தல் போன்றவற்றையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வயிற்றில் கழிவுகள் தங்காமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும். தினமும் சாப்பிட்ட பிறகு இரவில் திரிபலா சூரணம் எடுத்துக் கொள்வதன் மூலம் கழிவுகள் தாங்காமல் பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்