தெயுந்தரா ஆழ்கடலில் அதிநவீன செயற்கைக்கோள் கருவியை பொருத்திய 06 பேர் கைது!
இலங்கையின் தெயுந்தரா ஆழ்கடலில் அதிநவீன செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆழ்கடலில் பயணித்த கடற்படையினரால் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் 6 பேரும் நேற்று (08.10) கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பயன்படுத்திய செயற்கைக்கோள் கருவியை விட அதிநவீன செயற்கைக்கோள் கருவியை கண்டுபிடித்து, அதை தங்கள் காவலில் எடுத்துக்கொண்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசெல்கிறார்களா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்த மூன்று சிம் அட்டைகள் உள்ளிட்ட வழக்குப் பொருட்கள் தொடர்பில் நீதவானுக்கு அறிவித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.