01 இலட்சம் கலைப்படைப்புக்கள் – எகிப்தில் திறக்கப்படும் பிரமாண்ட அருங்காட்சியகம்!
பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கிசாவில் உள்ள குஃபுவின் (Khufu at Giza) பெரிய பிரமிடு அருகே மிகப் பெரிய அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகம் என்று விவரிக்கப்படும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் (GEM), ஏழு ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய சுமார் 100,000 கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்படவுள்ளது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த அருங்காட்சியகத்தில் எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னனான துட்டன்காமூனின் (Tutankhamun) சிலை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் அவர் பயன்படுத்திய கிரீடம், சிம்மானம் உள்ளிட்ட பிற பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இதற்காக பிரித்தானிய அரசாங்கத்திடமும் அந்நாட்டு அரசாங்கம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அதாவது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் எகிப்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ரொசெட்டா கல் உட்பட, பல பொருட்களை திரும்பத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
சுமார் $1.2 பில்லியன் (£910m; €1.1bn) செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பரந்த அருங்காட்சியக வளாகம் ஆண்டுக்கு 8 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிராந்திய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள எகிப்திய சுற்றுலாவிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.





