வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நலன்புரித்திட்ட ஆறுதல் போதாது – ரவிகரன் ஆதங்கம்
அரசாங்கம் மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெசும என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்துவதாக
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாமன்றில் இன்று (20) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு (அஸ்வெசும) தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், இறுதிப்போரில் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத்தவறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் மக்களுக்கு வறுமையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உண்ண உணவுக்கு மாற்றாக உணவைப் பயிரிட்ட மக்களின் வாழ்வாதார நிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் விடுவிக்குமாறும், தரையிலும் கடலிலும் மக்களை தொழில் புரியக்கூடியவகையில் வழிவகைகளை ஏற்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சிறையில் வாடும் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.அதுவே உண்மையான ஆறுதல் நலன்புரித்திட்டம்
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் ஆறுதல் நலன்புரி நன்மை கொடுப்பனவுத் திட்டத்தின் ஊடாக நலிவுற்றோர்க்கு தற்காலிக மற்றும் நீடித்த வலுவூட்டலை மேற்கொள்ளும் இந்த கொடுப்பனவுத் திட்டத்தின் தொடர்ச்சி வரவேற்புக்குரியது.
போருக்குப் பின்னர் 23 பாடசாலைகள் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ளன. மேற்படி வலயத்தில் 4 பாடசாலைகளில் 50% ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
வாழ்வாதார நிலங்கள், வாழுகின்ற வீடு, காணி இல்லாதிருப்பது வறுமையின் அடையாளம்
நெற்செய்கை நிலம், மேட்டுநிலம், வாழும் வீடு மற்றும் காணி இல்லாதிருப்பதை வறுமையின் சுட்டியாக ஆறுதல் நலன்புரி கொடுப்பனவுத் திட்டம் அடையாளப்படுத்துகிறது.
இறுதிப்போரில் உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு, அரசியல் கைதிகளாக இன்றளவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் குடும்ப வறுமைக்கு (அஸ்வெசும) நலன்புரித்திட்டத்தின் ஆறுதல் போதாது” என்றார்.





